fbpx

கழிவறை இல்லாத புகுந்த வீடு.. ஷாக்காகி திரும்பிப் போன மனைவி.. வேதனையில் கணவர் தற்கொலை!

by

மனைவி பிரிந்த ஏக்கத்தில் கணவன் தற்கொலை செய்துகொண்டார்.
சேலம்: கணவன் வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த புதுமணப்பெண் திருமணமான 3 நாளிலேயே வெளியேறினார். காதல் மனைவியின் பிரிவு தாங்காமல் புதுமாப்பிள்ளையோ கிணற்றில் குதித்து தற்கொலையே செய்து கொண்டார்.

சேலத்தில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் செல்லதுரை. இவருடைய சொந்த ஊர் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டன்பட்டி ஆகும். 26 வயதான செல்லதுரை, தன்னுடன் வேலை பார்த்த ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக நேசித்தார். பின்னர் இரு வீட்டிலும் கலந்து பேசி 3 நாளுக்கு முன்பு திருமணமும் தடபுடலாக நடைபெற்றது. திருமண சடங்குகளும் இனிதே முடிந்தது.

கழிவறை இல்லையா?
இனி வாழ போகும் கணவனின் வீட்டில் ஆயிரம் கனவுகளுடன் காலடி எடுத்து வைத்தார். மறுநாள் காலை, கழிவறை செல்ல வேண்டும், எங்கே உள்ளது? என கேட்க, வீட்டில் கழிவறை இல்லை என செல்லதுரை பதிலளித்தார். இதனால் அதிர்ந்த மணப்பெண், “என்னது, வீட்டில் கழிவறை இல்லையா? என்று கோப்பட்டு கத்தினார்.

கோபித்து சென்ற மணப்பெண்
ஒரு வீட்டில் கழிப்பறைகூட இல்லையா என்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி செல்லதுரையிடம் அழ தொடங்கினார். எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அழுகையை நிறுத்தாத மணப்பெண், கதறி கொண்டே சேலத்தில் உள்ள தன் வீட்டிற்கு வேக வேகமாக தனியாகவே கிளம்பி போய்விட்டார்.

ஏன் கல்யாணம் செய்துக்கிட்டே?
இதனால் விரக்தியடைந்த செல்லதுரை, மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டுக்கு சென்றார். மனைவியை பார்த்து, தன்னுடன் வீட்டுக்கு வருமாறு கெஞ்சினார். ஆனால் மணப்பெண்ணை, முடியவே முடியாது, கழிப்பறை கட்டிய பிறகு வந்து கூட்டி போங்கள்” என்று கறாராக சொல்லிவிட்டார். இதனால் நொந்துபோய் வீடு திரும்பிய செல்லதுரை அன்று இரவு முழுவதும் வீட்டில் யாருடனும் பேசவில்லை. இதில் பெற்றோருக்கும் சேர்ந்து கொண்டு, “பெண்ணை பற்றி எதுவுமே தெரியாம ஏன் கல்யாணம் செய்துகிட்டே?” என்று திட்டியுள்ளதாகவும் தெரிகிறது.

செல்லதுரையை காணோம்
மறுநாள் காலை அதாவது நேற்றுமுன்தினம் காலை வீட்டில் செல்லதுரையை காணவில்லை. வெளியில் எங்காவது போய் இருக்கலாம் என பெற்றோர் நினைத்தனர். ஆனால் ரொம்ப நேரம் ஆகியும் செல்லதுரையை காணாததால் பதற்றமடைந்த பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினார்கள். மகன் கிடைக்கவே இல்லை. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லா இடங்களிலும் கேட்டு பார்த்துவிட்டார்கள். செல்லதுரையை காணோம்.

கிணற்றில் சடலம்
கடைசியில் வீட்டிலேயே செல்லதுரை ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதில் “அப்பா, அம்மா, என்னை மன்னித்து விடுங்கள். தவறு செய்துவிட்டேன். தற்கொலை செய்து கொள்கிறேன். எனது மனைவி மற்றும் நண்பர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று எழுதி வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை, கோட்டகவுண்டன்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் செல்லதுரையின் சடலத்தை ஓமலூர் தீயணைப்பு துறையினரும், சூரமங்கலம் போலீஸாரும் கைப்பற்றினார்கள். மனைவி பிரிந்த ஏக்கத்தில் செல்லதுரை தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்வச் பாரத் திட்டம்
ஒருவீட்டில் கழிப்பறை இல்லாததும், அதற்கான முயற்சியை எடுக்காமல் காதல் மனைவி பிரிந்த ஏக்கத்தில் செல்லதுரை தற்கொலை செய்து கொண்டதும் அதிர்ச்சியாக உள்ளது. ஸ்வச் பாரத் திட்டம் நம் மாநிலத்துக்குள் நுழையவே இல்லையா என்றும் கேள்வி எழுகிறது. இந்த திட்டத்தின்கீழ் கழிவறை கட்ட ஒதுக்கப்படும் ரூபாய் என்ன ஆகிறது என்றும் தெரியவில்லை. கிராமங்கள்தோறும் இந்த திட்டத்தை துரிதமாக கொண்டு சேர்த்திருந்தால் இப்படி ஒரு உயிர் அநியாயமாக போயிருக்காது. அன்றைய காலம் போல பெண்கள் இப்போது இல்லை என்பதை மன, உளரீதியாக புரிந்து கொண்டு ஸ்வச் பாரத் திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.